Friday, May 17, 2013

ஒசாமா பின்லாடன் கதாநாயகனாக நடித்த "விஸ்வரூபம்": ஓர் உண்மைக் கதை


[விஸ்வரூபம் : அபத்தங்களின் விசால ரூபம்] 
(பாகம் - 6)

விஸ்வரூபம் திரைப் படத்தில், கமல்ஹாசன் ஒரு இந்திய முஸ்லிமாக, ஒரு RAW அதிகாரியாக நடித்திருப்பார். முதலில் பாகிஸ்தான் சென்று, அங்கே முகாமிட்டுள்ள தாலிபான் இயக்கத்தினுள் ஊடுருவுவார். பின்னர் தலைவர் முல்லா ஒமாருக்கு நெருக்கமான குடும்ப நண்பராக மாறுவார். தாலிபான் இயக்க உறுப்பினர்களுக்கு இராணுவ பயிற்சி அளிப்பார். தாலிபான் இயக்கத் தலைவர்களின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய ஒருவராக மதிக்கப் பட்டாலும், அவர் ஒரு RAW உளவாளி என்ற சந்தேகம் யாருக்கும் வராது. தாலிபான் ஆட்சியை அகற்றுவதற்கான அமெரிக்க படையெடுப்பு நிகழும் சமயத்தில், கமல் கொடுத்த துல்லியமான தகவல்களின் அடிப்படையில், அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தும். தாலிபான் தலைவர்களின் இருப்பிடம் பற்றிய தகவல்களை எதிரிக்கு கொடுத்தவர், உற்ற நண்பனாக பழகிக் கொண்டிருக்கும் கமல் தான் என்ற சந்தேகம், அந்நேரம் யாருக்கும் வந்திருக்காது. காலம் தாழ்த்தி தான், அந்த உண்மை தெரிய வரும். இந்தக் கதை, உண்மையிலேயே நடந்த கதை என்று சொன்னால் நம்புவீர்களா?

விஸ்வரூபம் திரைப்படம், ஒரு உண்மைக் கதையை ஆதாரமாக கொண்டு தயாரிக்கப் பட்டது. உண்மையான வரலாற்றுக் கதையில், தாலிபானுக்குள் ஊடுருவியது, ஒரு CIA உளவாளி. அவரும் ஒரு முஸ்லிம் தான். தாலிபான் தலைவருக்கு நெருங்கிய நண்பனாக இருந்தார். அவரது  குடும்பமும், ஒமாரின் குடும்பமும் உறவு முறை கொண்டாடும் அளவுக்கு நெருக்கமாக இருந்தார்கள். அவர் தான் தாலிபான் போராளிகளுக்கு, கெரில்லா போர்ப் பயிற்சி அளித்தார். பயிற்சியின் போது அவரால் தயாரிக்கப் பட்ட பிரச்சார வீடியோவை பார்த்து விட்டு தான், கமல்ஹாசன் தனது விஸ்வரூபம் படத்தில் அதே மாதிரியான காட்சிகளை அமைத்தார். அந்த CIA உளவாளியின் பெயரை சொன்னால், இன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். அவர் தான் "ஒசாமா பின்லாடன்"!  கமல்ஹாசனும், அவரது இரசிகர்களும், ஒசாமா பின்லாடனை தமது மானசீக குருவாக   கருதுகிறார்கள் போலும். தமாஷ்!

"இதெல்லாம் குப்பை...நாங்கள் நம்ப மாட்டோம்..." என்று யாராவது அடம்பிடித்தால், அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன.

 இங்கேயுள்ள படத்தை பாருங்கள். இராணுவ சீருடையில், துப்பாக்கி வைத்திருப்பது யார் என்று அடையாளம் தெரிகின்றதா? அவர் தான் ஒசாமா பின்லாடன். அவருக்கு அருகில், ஆலோசனை  வழங்கிக் கொண்டிருக்கும் அந்த அமெரிக்கர் யார்? அவர் பெயர்  பிரெசின்ஸ்கி (Brzezinski). அமெரிக்க அரசின் உயர்மட்ட சி.ஐ.ஏ. அதிகாரி. அவர் இப்போது என்ன செய்கிறார்? இன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு ஆலோசனை வழங்கிக் கொண்டிருக்கிறார்.சொல்ல மறந்து விட்டேன். அவர் போலந்தில் பிறந்த யூதர். அவரின் தந்தை சோவியத் யூனியனிலும், பின்னர் கனடாவிலும் தூதுவராக பணியாற்றியவர். போலந்து நாட்டை நாஜிப் படைகள் ஆக்கிரமித்ததும், அமெரிக்காவில் தங்கி விட்டார்கள். 

பிரெசென்ஸ்கி, ஆப்கானிஸ்தானுக்கான சி.ஐ.ஏ. தொடர்பு அதிகாரியாக பணியாற்றிய காலத்தில் தான், ஜிகாத் போராட்டம் சூடு பிடித்திருந்தது. "Operation Cyclone"  என்ற பெயரில், சி.ஐ.ஏ. பல கோடி டாலர்களை வாரியிறைத்தது. ஒவ்வொரு வருடமும் 20 - 30 மில்லியன் டாலர்களாக இருந்த உதவித் தொகை, 1987 ல் அதன் உச்சத்தை அடைந்தது. அந்த வருடம் மட்டும், 680 மில்லியன் டாலர்கள் ஜிகாத் போராட்ட நிதியாக ஒதுக்கப் பட்டது. பாகிஸ்தானில் உள்ள முகாம்களில் வைத்து, ஜிகாத் போராளிகளுக்கு இராணுவப் பயிற்சி அளிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு வேண்டிய நவீன ஆயுதங்கள் எல்லாம் அந்த அமெரிக்க நிதியில் இருந்து வழங்கப் பட்டன.  ஸ்டிங்கர் ரக விமான எதிர்ப்பு ஏவுகணைகள், அன்று பல அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கே கிடைத்திருக்கவில்லை. ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டுள்ள சோவியத் படைகளுக்கு கடும் இழப்புகளை உண்டாக்குவதே அமெரிக்காவின்  நோக்கம். இறுதியில், ஆப்கான் போரை வெல்ல முடியாத சோவியத் படைகள் பின்வாங்கிச் சென்றது மட்டுமல்லாது, சோவியத் ஒன்றியமும் நொறுங்கிப் போனது. 

அது சரி, அமெரிக்காவே ஜிகாதிகளுக்கு உதவி செய்தது என்றால், சவூதி அரேபியரான பின்லாடனுக்கு அங்கே என்ன வேலை?  பனிப்போர் தீவிரமடைந்திருந்த காலத்தில், ஆப்கான் தீவிரவாதக் குழுக்களுக்கு அமெரிக்கா உதவுவது தெரிய வந்தால், அது சர்வதேச அரங்கில் இராஜதந்திர நெருக்கடிகளை தோற்றுவிக்கலாம். அதனை தவிர்ப்பதற்கு, பின்லாடன் போன்றவர்களின் உதவி தேவைப்பட்டது. ஏற்கனவே, மேற்குலகிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்திய ராஜதந்திர நெருக்கடி ஒன்று ஏற்பட்டது.  பிரிட்டனின் சிறப்புப் படையணியான SAS பயிற்சியாளர்கள், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையோரம் இருந்த பயிற்சி முகாம் ஒன்றில், ஜிகாத் போராளிகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். அந்த முகாம் சோவியத் படையினரின் தாக்குதல் ஒன்றில் கைப்பற்றப் பட்டது. அங்கிருந்து இரண்டு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்த சம்பவத்திற்குப் பிறகு, ஜிகாத் போராளிகளை ஸ்காட்லாந்துக்கு வரவழைத்து பயிற்சி கொடுத்தார்கள். 

அமெரிக்காவின் நெருங்கிய  கூட்டாளியான, சவூதி அரேபியாவும் ஜிகாத் போராட்டத்திற்கு நிதியுதவி செய்து வந்தது. தனது வஹாபிச பாணி இஸ்லாமை பரப்ப வேண்டும் என்ற நோக்கமும், சவூதி அரேபியாவுக்கு இருந்தது. ஒரு சவூதி அரேபிய இளவரசர், ஆப்கானிஸ்தானுக்கு வந்தால், போராளிகள் மிகுந்த உத்வேகத்துடன் போர் புரிவார்கள் என்று, ஜிகாத் தலைவர்கள் கேட்டுக் கொண்டனர். சவூதி அரேபியாவில் இருந்து எந்தவொரு இளவரசரும் போராடுவதற்காக ஆப்கானிஸ்தான் செல்லவில்லை. ஆனால், சவூதி மன்னர் குடும்பத்திற்கு நெருக்கமான செல்வந்தர்களான பின்லாடன் குடும்பத்தில் இருந்து ஒசாமா என்பவர் வந்தார்.  ஒரு தொழிலதிபரின் மகனான ஒசாமா பின்லாடன், பெருந்தொகைப் பணத்துடனும், அரேபியாவில் சேர்க்கப்பட்ட தொண்டர்களையும் கூட்டிக் கொண்டு வந்தார்.

ஒசாமா பின்லாடன், சவூதி மன்னருக்கு மட்டுமல்ல, அமெரிக்காவுக்கும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவராக விளங்கினார். சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய ஒசாமா, சி.ஐ.ஏ. க்கு வேலை செய்தார். சி.ஐ.ஏ. யில் அவருக்கு சூட்டப்பட்ட புனை பெயர்: Tim Osman.  (இதனை நிரூபிக்கும் சி.ஐ.ஏ. இரகசிய ஆவணம் ஒன்று இங்கே இணைக்கப் பட்டுள்ளது.) 

ஒசாமா பின்லாடன் ஒரு CIA உளவாளி என்பதை நிரூபிக்கும் இரகசிய ஆவணம். 






















ஒசாமா பின்லாடனுக்கும், அமெரிக்க சி.ஐ.ஏ. அதிகாரிகளுக்கும் இடையில் நடந்த சந்திப்பானது, The New Jackals (by Simon Reeve)  என்ற நூலில் விபரமாக பதிவு செய்யப் பட்டுள்ளது.  அநேகமாக, சி.ஐ.ஏ. மற்றும் சவூதி அரேபியாவில் இருந்து செல்லும் பணம், சரியான இடத்தை சென்றடைவதை கண்காணிக்கும் பொறுப்பு ஒசாமாவுக்கு வைத்திருக்கலாம். எந்தெந்த ஆயுதங்கள் தேவை என்ற பட்டியலையும் அவரே தயாரித்திருந்தார்.  ஆப்கானிஸ்தானில் ஒரு டசின் ஆயுதபாணி இயக்கங்கள், சோவியத் இராணுவத்தை எதிர்த்து போராடிக் கொண்டிருந்தாலும், குல்புதின் ஹெக்மதியாரின் இயக்கத்திற்கு தான் பெருமளவு வெளிநாட்டு உதவி கிடைத்து வந்தது. ஆப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ. பணத்தில் அரைவாசி அந்த இயக்கத்திற்கு போய்ச் சேர்ந்தது. சி.ஐ.ஏ. உளவாளியான பின்லாடனும், அதனுடன் தான் நெருங்கிய உறவைப் பேணி வந்தார். 

விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் சவூதி அரேபியர் ஒருவர், அபின் வியாபாரம் செய்வதாகவும், அதனை தாலிபான் தலைவர்கள் சாதாரணமாக எடுப்பதாகவும் காண்பித்திருப்பார்கள். அது உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவிக்கின்றது. சி.ஐ.ஏ யின் உதவி பெற்ற குல்புதின் ஹெக்மதியாரின் இயக்கம், ஹெரோயின் போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வந்தது. இது அன்று, அமெரிக்க அரசு, பாகிஸ்தான் அரசு உட்பட, எல்லோருக்கும் தெரியும். அனேகமாக, முஜாகிதீன் குழுக்கள் சீரழிந்ததற்கு இது போன்ற கிரிமினல் செயற்பாடுகளும் முக்கிய காரணம். அன்று பல முஜாகிதீன் ஆயுதக் குழுக்கள் போதைவஸ்து கடத்தி வந்தன.

அமெரிக்காவின் ஆசீர்வாதம் பெற்ற "விடுதலைப் போராளிகள்", ஆப்கான்  வர்த்தகர்களிடம், மக்களிடம் கப்பம் வசூலித்து வந்தனர். கேட்கும் பணத்தை கொடுக்க மறுத்தால், கடத்திச் சென்று சித்திரவதை செய்தனர். அது போதாதென்று, போராளிக் குழுக்களில் சிறுவர்களையும் பலாத்காரமாக  சேர்ப்பது, பெண்களை பாலியல் வல்லுறவு செய்வது....இப்படி அவர்களது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில், குற்றங்கள் வரம்பு மீறிப் போய்க் கொண்டிருந்தன. சோவியத் படைகளின் வெளியேற்றத்தின் பின்னர், ஆயுதக் குழுக்கள் ஒன்றுடன் ஒன்று அதிகாரத்திற்காக மோதிக் கொண்டன.  மக்களுக்கும், ஆயுதக் குழுக்களுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது. அத்தகைய தருணத்தில் தான், தாலிபான்கள் உருவானார்கள். சரியாகச் சொன்னால், CIA யும், ISI யும் தாலிபான் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கினார்கள். ஒசாமா பின்லாடனும், அவரை பின்பற்றிய அரபு தொண்டர்களும், புதிய இயக்கத்துடன் சேர்ந்து கொண்டனர். 

ஆப்கானிஸ்தானின் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அமெரிக்கா பாகிஸ்தானுடன் சேர்ந்து, தாலிபான் என்ற இயக்கத்தை உருவாக்கியது. ஆப்கானிஸ்தானில் ஏற்கனவே ஒரு மாற்று அரசியல் சக்தி இருந்தது. அவர்கள் மேற்கத்திய நாகரீகத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். அதாவது, பெண் கல்வி, ஆண் - பெண் சமத்துவம், மேற்கத்திய கலாச்சாரம், மதச்சார்பற்ற அரசு.... இவற்றை எல்லாம் ஆதரிப்பார்கள். ஆனால், அமெரிக்காவுக்கு அவர்களுடன் தொடர்பு கொள்ள விருப்பமில்லை. ஏனென்றால், அவர்கள் ஆப்கான் மார்க்சிஸ்டுகள்! அமெரிக்காவை பொறுத்தவரையில், மார்க்சிஸ்டுகள் மேல் நம்பிக்கை வைப்பதை விட, தாலிபான் போன்ற மத அடிப்படைவாதிகளை வளர்த்து விடுவது சிறந்ததாக பட்டது.

ஆப்கானிஸ்தானை இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள் தான் ஆளவேண்டும் என்பதே அமெரிக்காவின் எதிர்பார்ப்பாக இருந்துள்ளது. இப்போது அந்த மார்க்சிஸ்டுகள் எங்கே? உண்மையில், தாலிபான் படைகள் முன்னேறும் வரையில், அவர்கள் அங்கே தான் இருந்தார்கள். ஆப்கானிஸ்தானில் பெரும்பகுதி தாலிபான் ஆட்சியின் கீழ் வந்த பின்னர், அகதிகளாக வெளியேறினார்கள். குறைந்தது பத்தாயிரம் ஆப்கான் மார்க்சிஸ்டுகள், அவர்களது குடும்பங்களுடன் ரஷ்யா ஊடாக நெதர்லாந்து வந்து சேர்ந்தனர். அந்த நாட்டில், அனைவருக்கும் அகதி தஞ்சம் வழங்கப் பட்டது. அவர்களில் பலரை நான் நேரில் சந்தித்து உரையாடி இருக்கிறேன். சிலர் இன்றைக்கும் எனது உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். ஆப்கானிஸ்தான் பற்றிய இந்தக் கட்டுரைகள் எழுதுவதற்கு, அவர்கள் வழங்கிய தகவல்கள் பெரிதும் உதவி உள்ளன. அவர்களுக்கு நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன்.

No comments:

Post a Comment