Wednesday, May 15, 2013

சூது கவ்வும்


படம் தொடங்கிய சில நிமிடங்களில் இருந்து படம் முடியும் வரை விலா நோக சிரிக்க வைத்துள்ளனர் 'சூது கவ்வும்' குழுவினர்.

ஆட்களைக் கடத்தி, மிரட்டி  பணம் சம்பாதிக்கும் நல்ல கடத்தல்காரர் தாஸ். ஊரை விட்டு சென்னை ஓடி வந்த ஒருவனும், வேலையை இழந்த அவனது இரண்டு நண்பன்களும் தாஸுடன் இணைந்து அமைச்சர் மகனைக் கடத்துகின்றனர். அதன் பின் தாஸ் குழுவினருக்கு என்ன நடந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

தாஸாக விஜய் சேதுபதி. 2012 இல் இறுதியில், விஜய் சேதுபதி நடிப்பில் வந்து அசத்திய நடுவில் கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை விட பல மடங்கு அசத்துகிறது இப்படம். இரண்டிலுமே நாயகனாக நடித்திருந்தாலும், விஜய் சேதுபதி பின் வரிசையில் நிற்கும் நபர் போலவே வருவார். எனினும் படத்தை சுமப்பவர் அவரே! கதை கேட்டு படங்களை தேர்ந்தெடுப்பதால் தான் பெரிய ஹீரோக்கள் என அறியப்படுபவர்கள் மண்ணை கவ்வும் பொழுது, விஜய் சேதுபதி திரையரங்கில் தனிக்காட்டு ராஜாவாய் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். காவல்துறை அதிகாரியிடம், "சாரி" என ஒற்றை வார்த்தையை சொல்லும் பொழுது அவரது முக பாவனை, உடல் மொழியெல்லாம் கூட கன கச்சிதமாய் துணை நின்று மன்னிப்பைக் கோருகிறது. தாஸ் என்னும் அந்தக் கொள்கையுடைய கதாபாத்திரத்திற்கு அப்படியே உயிர் அளித்துள்ளார் விஜய் சேதுபதி. தாஸ் பேசும் ஆங்கிலத்திற்கு, அவர் மட்டும் சுதந்திரத்திற்கு முன் பிறந்தவராக இருந்திருந்தால், இந்நேரம் அவரை நாம் சுதந்திரப் போராட்ட தியாகியாகக் கொண்டாடியிருப்போம். தாஸ் பாத்திரத்தின் வலிமை அவருக்குள் இருக்கும் மனிதமே!! ஷாலுவாக வரும் சஞ்சிதா ஷெட்டியை இயக்குநர் அழகாக படத்தில் உபயோகப்படுத்திவிட்டு, அதை விட அழகாக வெளியேற்றியுள்ளார்.

விஜய் சேதுபதிக்கு நிகராகக் கலக்கியிருப்பவர் அமைச்சரின் மகன் அருமை பிரகாசமாக வரும் கருணாகரன். மிக இயல்பாய் திரையில் தோன்றி படத்தின் திருப்பத்திற்கும் சுவாரசியத்திற்கும் காரணமாகிறார். ராதா ரவி சொல்வதற்கு மிக பவ்வியமாக தாலையாட்டுவார். "நீ தான்யா அரசியலுக்கு ஏத்த ஆளு" என சம கால அமைச்சர்களை வம்புக்கு இழுத்திருப்பார்கள். நேர்மையான அமைச்சராக இறுக்கமான முகத்துடன் வருகிறார் எம்.எஸ்.பாஸ்கர். நேர்மையாக இருந்தால் சிரிப்போ மகிழ்ச்சியோ இருக்காது எனவும், ஊரோடு ஒத்து வாழ முடியாது எனவும் அநியாயத்திற்கு அழுத்தி வலியுறுத்துகிறார்கள். ஒரு சீரியசான தவறு போல் "நேர்மை" சித்தரிக்கப்படுகிறது. தனது தந்தையைப் போலவே மிக நேர்மையானவராக பங்கு பணத்தை தாஸிடம் கொண்டு வந்து தருகிறார் அருமை பிரகாசம். அதாவது செயல்களில் நேர்மையாக இருப்பதை விட மனிதர்களுக்கு நேர்மையாக இருப்பது முக்கியம் என தாஸும் கருணாகரனும் உணர்த்துகின்றனர். நேர்மை என்ற பெயரில் எம்.எஸ்.பாஸ்கர், லஞ்சம் கொடுப்பவரை காட்டிக் கொடுப்பதால் தான் பலரின் வாழ்க்கை திசை மாறுகிறது. அருமை பிரகாசம் பிராச்சாரத்திற்குப் போகும் பொழுது வரும், "எல்லாம் கடந்து போகுமடா" பாடல் சரியாகப் பொருந்துகிறது.

'நயன்தாரா ஆலயம்' கட்டியதால் பகலவன் என்பவரை ஊரை விட்டுத் துரத்தி விடுகின்றனர். அழகாய் சிரித்த முகமாய், பகலவன் என்னும் பாத்திரத்தில் நடித்துள்ளார் சிம்ஹா. வெளிச்சம் புகாத அறையில் அடிவாங்கும் பொழுது, 'இதை தான் இருட்டறையில் முரட்டுக்குத்துன்னு சொல்வாங்களா?" என சிம்ஹா கேட்டதும் திரையரங்கில் சிரிப்பொலி வெடிக்கிறது. அலாரம் வைத்து குடிப்பவராக விஜய் டி.வி. கனா காணும் காலங்கள் புகழ் 'அல்கேட்ஸ்' ராஜ் திலக் நடித்துள்ளார். பல நிறுவனங்கள் ஏறியிறங்கி வேலை கிடைக்காத விரக்தியில் கடத்தலில் இறங்குகிறார் கேசவன். கேசவனாக நடித்துள்ளவர் அசோக் செல்வன். இவர்கள் தங்கியிருக்கும் அறையின் சுவரை அலங்கரிப்பது விஜய டி.இராஜேந்திரரின் புகைப்படங்கள். இந்த நண்பர்கள் மூவரும் தான் தாஸின் கூட்டாளிகளாக இணைகின்றனர்.

"எனக்கு மட்டும் தான் ஷாலு தெரிவா?"

"அப்ப இது நோய். டாக்டரைப் பார்க்கணும்."

"அதெல்லாம் பார்த்தாச்சு. மாத்திரைக் கொடுத்தார். ஷாலு இல்லாம போர் அடிச்சது. மாத்திரை சாப்பிடுறதை நிறுத்திட்டேன்."

"இந்த நோய் என்னப் பண்ணா பாஸ் வரும்?"

என்ற ரீதியில் படம் நெடுக்க வரும் வசனங்களே படத்தின் சுவாரசியத்தை உறுதிபடுத்துகிறது.

பிரம்மா என்னும் காவல்துறை அதிகாரியாக வாய் திறவாமல் மிரட்டியுள்ளார் யோக் ஜபீ (Yok Japee). பில்லா - 2 இல் அஜீத்தின் நண்பர் ரஞ்சிதாக வருவார். விஷ்வர்த்தனின் பில்லாவில் கூட கூலிங்-கிளாஸ் அணிந்த வில்லனாக வருவார். என்கவுன்ட்டரே மிகக் கொடுமையான செயல். அதையும் சைக்கோ போல் விதம் விதமாக செய்பவராக உள்ளார் பிரம்மா. இவரிடமிருந்து தப்பிக்க விஜய் சேதுபதி நிருபர்களிடம் தரும் பேட்டி புத்திசாலித்தனமானது. 'தன்வினை தன்னை சுடும்' என்பது பிரம்மா விஷயத்தில் கொஞ்சமாக உறுதியாகியுள்ளது. ரவுடி டாக்டராக வரும் அருள்தாஸின் அறிமுகமும், கலை ஆர்வமும் அற்புதமாக உள்ளது. எங்களை என்கவுன்ட்டர் செய்யப் போற இடம் உங்களுக்கு எப்படித் தெரியுமென கேசவன் வினவ, "காவல்துறை என் நண்பன்" என்ற ரவுடி டாக்டரின் பதில் அட்டகாசம். முன்பே குறிப்பிட்டிருந்தது போல் படத்தின் மிகப் பெரிய பலம் வசனங்கள்.

சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை, தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு என படத்தில் அனைத்துமே அருமை. கிட்னாப்பிங் ரூல்ஸ் என ஐந்து விதிகளை தாஸ் எழுதி வைத்திருப்பார். அதில் முதலாவது, அதிகாரத்தில் இருப்பவர்கள் மீது கை வைக்க கூடாது என வரும். அதனால் அமைச்சர் மகனை கடத்த தயங்குவார் விஜய் சேதுபதி. உடனே ராஜ் திலக், 'சொதப்பினா ஒத்துக்கணும்' என்ற ஐந்தாவது விதியின் படி அதை ஒத்துக் கொள்ள செய்வார். ஏதாவது இயந்திரத்தை இறக்குமதி செய்தால் அதிகபடியான வரி விதிப்பவர்கள் உதிரி பாகங்களாகக் கொணர்ந்து இயந்திரத்தை உருவாக்கினால் வரிகள் கம்மிபடுத்தும் அரசாங்கத்தின் விதிகள் தான் ஞாபகம் வருகிறது. மற்றவர்களை கேலி செய்வது தான் நகைச்சுவை என்ற அபத்தம் நிலவி வரும் வேளையில், நலன் குமாரசாமி முழு நீள நகைச்சுவைப் படத்தினை திகட்டாதா வண்ணம் அளித்துள்ளார்.

சூது - வெற்றி; கவ்வும் - சூழும். படக்குழுவினருக்கு வெற்றிச் சூழும் என்பது மிகையன்று.

No comments:

Post a Comment