ஆடு மாடு டீலிங்க்கு கூட இப்பொழுதெல்லாம் இணையதளத்தை உருவாக்கிவிட்டார்கள். இண்டர்நெட் எல்லாம் ஒரு லிமிட் வரைக்கும்தான் என்று இனிமேல் யாரும் சொல்ல முடியாது போலிருக்கிறது. மாப்பிள்ளையும் பொண்ணும் நேராக பார்த்துக் கொள்ளாமல்‘வெர்ச்சுவல் திருமணம்’ சரி; முதலிரவுக்கு இரண்டு பேரும் வந்துதானே ஆக வேண்டும்? ‘வெர்ச்சுவல் சாந்தி முகூர்த்தம்’ எல்லாம் Possible கிடையாது என்று சொன்னவர்களையும் வாயடைக்கச் செய்துவிட்டார்கள். அது எப்படி? இன்னொரு நாளைக்கு அது பற்றி விரிவாக பேசலாம். இப்பொழுது ஹேக்கிங் பற்றி....
நம் ஊரில் மளிகைக் கடைகள் உட்பட அனைத்து நிறுவனங்களும் தங்களுக்கென தனி இணைய தளங்களை நடத்தி வருகின்றன. இதற்காக இணையத்தில் நமக்கு தேவைப்படும் அளவிற்கான இடத்தை 'டொமைன் புரொவைடரிடம்' பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும். இந்த இடத்தை ஸ்பேஸ் என்று சொல்வோம். வீடு கட்டும் போது ஒரு கிரவுண்ட் நிலத்தை முதலில் வாங்குவதற்கு இதை ஒப்பிடலாம். கூகிள் உட்பட ஏகப்பட்ட நிறுவனங்கள் கூவி கூவி விற்கின்றன. இவர்களிடம் காசு கொடுத்து இடம் வாங்க வேண்டும்.
இணையத்தில் தேடிப்பார்த்தால் காசுக்குத் தரும் நிறுவனங்களை விட இலவசமாக ஸ்பேஸ் கொடுக்கும் நிறுவனங்கள் ஏகப்பட்டவை இருக்கின்றன. இலவச சேவையா அல்லது காசு கொடுத்து வாங்கப் போகிறோமா என்பது இணையத்தளத்தின் தேவையைப் பொறுத்து இருக்கிறது. காசு கொடுத்து வாங்கும் இடங்கள் உங்களுக்கே உங்களுக்கானதாக இருக்கும். இணையத்தள பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சற்று கவனம் செலுத்தலாம். நமக்கு தேவையான படிக்கு கிடைக்கும் ஸ்பேஸை மாற்றியமைக்கலாம். அதே சமயம் இலவச சேவைகளில் எல்லாவிதமான வசதிகளும் இருக்கும் என்று சொல்ல முடியாது. ‘சும்மா கிடைக்கிற மாட்டை பல்லை பிடித்து பார்க்க முடியாது அல்லவா?’ அவர்கள் தருகின்ற வசதிகளுக்குத் தக்கபடியாக நம் தளத்தை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான். ரஜினிகாந்த் மாதிரி தன் தலைமுடியின் அமைப்பிற்கேற்ப கதையை வைத்தும் வெற்றி பெறலாம். கமல்ஹாசன் மாதிரி கதைக்கேற்ப தலைமுடியை மாற்றி வைத்தும் வெற்றி பெறலாம்.
டொமைன் பதிவு செய்யப்பட்டவுடன் நமக்கு பயனாளர் கணக்கு மற்றும் கடவுச் சொல்லை புரொவைடரிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். ஸ்பேஸ் தயாரான பின்னர், இணையத்தளத்தின் கட்டிட வேலையை ஆரம்பிக்க வேண்டியதுதான். இணையத்தளங்களை வடிவமைக்க பெரிதாக மெனக் கெட வேண்டியதில்லை. கணக்கு வழக்கில்லாமல் மென்பொருட்கள் இருக்கின்றன. இவற்றிலும் இலவச மென்பொருட்கள், காசுக்கு வாங்கப்பட வேண்டியவை என்ற வித்தியாசம் உண்டு.
உருவாக்கப்படும் இணையத்தளங்களில் இரண்டு வகைகள் உண்டு. Static மற்றும் Dynamic என்கிறார்கள். ஸ்டேடிக் இணையத்தளங்கள் வெறும் தகவல் தரும் தளங்களாக இருக்கும். கட்டுரைகள், கவிதைகள், தொடர்பு முகவரி போன்றவற்றை இந்தத் தளங்களில் வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் கணிணி இயக்கம் தெரிந்திருந்தால் மென்பொருளை படித்து இந்த வகையான தளங்களை யாரும் சுலபமாக வடிவமைத்து விடலாம்.
டைனமிக் என்று இன்னொரு வகை இருக்கிறது. பங்கு வணிகத்தின் தற்போதைய நிலவரம், நடந்து கொண்டிருக்கும் கிரிக்கெட்டின் நேரடித் தகவல்கள், ரயில்வேயின் தளங்கள், ஆன் லைன் பணப்பரிமாற்றம் செய்ய உதவும் வங்கிகளின் தளங்கள் போன்றவை இந்த வகையறாவில் அடங்கும். இத்தகைய தளங்களில் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன. இவற்றின் பாதுகாப்பு முக்கியமானது என்பதால், இவ்வகைத் தளங்களை வடிவமைக்கும் பொறுப்பு பெரும்பாலும் சாப்ட்வேர் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் படுகின்றன. டிசிஎஸ்,இன்போஸிஸ்,விப்ரோ போன்ற நிறுவனங்கள் இணையத் தளங்களை வடிவமைத்து, பின்னர் தளங்களின் பரமாரிப்பு பொறுப்பையும் அந்த நிறுவனங்களே எடுத்துக் கொள்கின்றன. சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்த வகையான பணிகளை மட்டும்தான் செய்கின்றன என இந்த இடத்தில் நீங்கள் முடிவு செய்து கொள்ள வேண்டாம். இவை அவற்றின் வருவாயில் ஒரு பகுதிக்கான வேலை அவ்வளவுதான்.
இப்படி வடிமைக்கப்படும் இணையதளங்கள் வாடிக்கையாளரின் பார்வைக்கும், அவர்களின் சேவைக்கும் திறக்கப்படும். இந்த இணையதளங்களை உலகின் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து கொண்டு ஒரு குழு தகர்க்கும். இதை இணையதள தகர்ப்பு என்கிறார்கள்(website hacking). தகர்த்தல் என்பதை இணையதளத்தில் இருக்கும் தகவல்களை மாற்றியமைத்தல் அல்லது மற்றவர்களால் குறிப்பிட்ட தளத்தை பார்க்கவே இயலாதபடி செய்தல் என்றெல்லாம் சொல்லலாம். கோபிச்செட்டிபாளையத்தில் இருக்கும் சிறிய போட்டோ ஸ்டுடியோ ஒன்றின் இணையதளத்தையோ அல்லது மணிகண்டன் போன்ற தனியொருவர் நடத்தும் இணையத்தளத்தையோ முடக்ககும் போது ‘யார் முடக்கியிருப்பார்கள், தளத்தை திரும்பவும் இயக்க இயலுமா’ என்று அதிகமாக குழப்பம் அடைவதாகத் தெரிவதில்லை. ‘போனது போச்சு’ என்று விட்டுவிடுவார்கள்.
இதுவே அரசாங்கத்தின் இணையதளம் அல்லது மிகப்பெரும் வணிக நிறுவனத்தின் இணையத்தளங்கள் முடக்கப்படும் போது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும். இத்தகைய தளங்கள் தகர்க்கப்படும் போது இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்படலாம் அல்லது பெரும் தொகை இழக்கப்படலாம். ஃபேஸ்புக்கை ஒரு நாள் முடக்கினால் கூட ஆயிரக்கணக்கானோருக்கு கை கால் நடுக்கம் எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறதுதானே?
இங்கு ஒரு சிறுதகவலை குறிப்பிட வேண்டும்- .com என்று முடியும் தளங்கள் வணிகத் தளங்கள் (கமர்சியல்), .org என்று முடிபவை நிறுவனங்களின் தளம்(ஆர்ககெனைசேஷன்), ac.in என்று முடியும் தளங்கள் இந்திய கல்வி நிறுவனங்களின் தளங்கள்(அகடமிக்),.in என்பது இந்தியா என்பதையும், .gov என்பது அரசாங்கத்தையும் (கவர்ன்மெண்ட்) குறிக்கும். இப்படி தளங்களின் விகுதியை வைத்து அது எந்த வகையான தளம் என்று முடிவு செய்யலாம்.
www.abc.gov.in என்பது அரசாங்கத்தின் தளம் என்று வைத்துக் கொள்வோம்.இதனை தகர்ப்பவர்கள் இந்தத் தளத்திற்கு ஆபாச தளம் ஒன்றை இணைப்பாக கொடுத்துவிட முடியும் அல்லது இருக்கும் தளத்திலேயே தவறான தகவல்களைக் கொடுத்துவிட முடியும். அப்படி இருக்கும்பட்சத்தில் யாராவது அரசாங்கத்தின் தளம் என்று திறக்கும் போது ஆபாசத்தளம் திறக்கும்.
இது போன்று முக்கியத்தளங்கள் முடக்கப்படும் போது அரசாங்கமோ சம்பந்தப்பட்ட நிறுவனமோ தக்க நடவடிக்கை எடுக்க முற்படுகிறார்கள். சில வருடங்களுக்கு முன்பாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் பிரிவின் இணையத்தளமே தகர்க்கப்பட்டது. திருப்பதிக்கே மொட்டை என்பது போலத்தான். வால் பிடித்து சென்ற போலீஸ் டீம் வழக்கமான இணையக் குற்றங்களைப் போலவே ஒரு இன்டர்நெட் சென்டரில் போய் நின்றது. ஒரு தகவல் தொடர்பியல் பொறியாளர், இரண்டு பொறியியல் மாணவர்கள்- இதில் ஒருவர் மென்பொருள்(சாப்ட்வேர்) மற்றவர் வன்பொருள்(ஹார்ட்வேர்) வல்லுநர், மற்றொரு வழக்கம்போலவே- இதற்கு உடந்தையாக இருந்ததாக சென்டரின் பணியாளர் ஆகியோரைக் கைது செய்தது. எப்படி தளத்தை முடக்கினார்கள் என விசாரித்த போது, இணையத்தளத்தை முடக்குவதற்கான சாப்ட்வேர்கள் இலவசமாகவே இணையத்தில் மலிந்து கிடப்பதை சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
இவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்கான நோக்கம் மிக வித்தியாசமானதாக இருந்திருக்கிறது. தங்கள் வாக்குமூலத்தில் "சைபர் கிரைம் பிரிவிற்கு பாடம் கற்பிக்க இந்த வேலையைச் செய்ததாக" சொன்னார்கள்.
இதே போல பிலிப்பைன்ஸில் தகவல் தொழிநுட்பத்துறையின் தளத்தை உடைத்து, அதில் கணக்கு வைத்திருக்கும் 369 நிறுவனங்களின் தொலைதூர தொலைபேசி வசதியைத் திருடி விற்ற குற்றத்திற்காக இந்தியப் பெண் பூஜா கேம்லானி என்பவர் கைது செய்யப்பட்டார். இதனால் அந்த நிறுவனங்களுக்கு உண்டான நஷ்டம் 35 லட்சம் அமெரிக்க டாலர்கள் என்று கணக்கிடப்பட்டிருக்கிறது. இது வேறொன்றுமில்லை. என் நிறுவனத்தில் இருந்து குறிப்பிட்ட 'கோட் வேர்ட்' உபயோகப்படுத்தி வெளிநாட்டிற்கு தொலைபேசி அழைப்பைச் செய்ய இயலும். இந்த 'கோட்வேர்ட்' ஒவ்வொருவருக்கும் ஒன்றாக இருக்கும். இதனை ஒரு கணிப்பொறியில் சேமித்து வைத்திருப்பார்கள். இந்த எண்களைத் திருடிக் கொண்டால் ஒருவர் வேறு எந்த தொலைபேசியிலிருந்தும் வெளிநாட்டு அழைப்புகளை மேற்கொள்ள இயலும். இதைத்தான் பூஜா செய்திருக்கிறார்.
இப்படி நிதி ஆதாரத்திற்காக தகர்க்கப்படும் நிகழ்ச்சிகள், இராணுவத்தகவல்களைத் திருடுவதற்கான முயற்சிகள், எதிராளி நிறுவனத்தின் தகவல்களை கடத்த நிகழ்த்தப்படும் தகர்ப்புகள் அல்லது வெறும் பொழுது போக்கிற்காக நடத்தப்படும் தகர்ப்புகள் என நிறைய வகைகள் இருக்கின்றன.
போர்னோகிராபித் தளங்கள் எனப்படும் ஆபாசத்தளங்கள் மிக அதிக அளவில் தகர்ப்படுவதாக சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இத்தளங்கள் சட்டப்பூர்வமாக புகார் செய்ய முடியாத தளங்களாக இருப்பதால் ‘திருடனை தேள் கொட்டின மாதிரி’ சைலண்டாக இருந்து விடுகிறார்கள். தகர்ப்பு நடவடிக்கைகள் வெளிச்சத்திற்கு வருவதில்லை. இந்தத் தளங்கள் விளம்பரங்கள் மூலமாக அதிக வருவாய் ஈட்டித் தரக்கூடியதாக இருப்பது தகர்ப்பிற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
இணையத்தளங்களை தகர்ப்பது எப்படி என்ற புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. இணையத்திலேயே படிப்படியான செயல்முறைகளோடு தெளிவான விளக்கங்கள் இருக்கின்றன. புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் பாடமாகவும் கற்பிக்கிறார்கள். எனில் இணையத்தளங்களை தகர்ப்பது குற்றமில்லையா? மற்றவர்களின் தளங்களை அவர்களின் அனுமதியில்லாமல் தகர்த்து அதன் வடிவத்தை மாற்றுவதும், வேறு தகவல்களை நுழைப்பதும் கிரிமினல் குற்றம்தான்.
மேற்சொன்ன பாடத்திட்டங்களை நன்னெறி தகர்ப்பு (எதிகல் ஹாக்கிங்)என்பதற்காக உபயோகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டவை.அதாவது தீவிரவாதிகள், குற்றவாளிகள் ஆகியோரின் இணையத்தளங்கள் அரசாங்கத்தால் தகர்க்கப்படுகின்றன. தகர்ப்பதற்கான தொழில்நுட்பம் ஒன்றுதானே. அரசாங்கம் குற்றவாளிகளிடம் செய்யக் கூடிய எல்லாவற்றையும் இம்மி பிசகாமல் குற்றவாளிகளால் திருப்பிச் செய்ய முடிகிறது. இவற்றை கெடுநெறி தர்ப்பு என்று வகைப்படுத்துகிறார்கள்.
No comments:
Post a Comment