Wednesday, May 15, 2013


இளமை எனக்கு மிகவும் பிடித்தமானது. அது புதிதானது. சிந்தனை, செயல், என எல்லாவற்றிலும், ஒரு புதுவேகம் இருக்கக் கூடிய பருவம். தன்னைச் சார்ந்திருப்போரையும் கூட சற்றுத் தொற்றிக் கொள்ளும் சுறுசுறு பருவம். அதனால் எனக்கு இளமை பிடிக்கும். கருப்பு வெள்ளைச் சினிமாக்காலத்தவன் இல்லையென்றாலும், இளையவன் எனச்சொல்லும் வயதுக்குப் பிள்ளைகள் வளர்ந்துவிட்டதால், பெருசாகிப்போனவன். இளமையாய் எண்ணங்களை வைத்துக்கொள்ள விரும்பும் எனக்கு எப்போதும் இளைய நண்பர்கள் மீது சற்று விருப்பம் அதிகம். அப்படியான இளையவர்கள் மூவருடன் ஒரு மாலைப்பொழுது...
புலம்பெயர் தேசத்தில் நான் பழகிய நம் இளைஞர் பலரிடத்திலும் காணப்பட்ட ஒரு கவலை, பெரியவர்கள் எப்போதும் தகமைபெற்று தலைநிமிரும் இளையவர்கள் பற்றிக் கருத்திற் கொள்ளாது, தவறிப்போகும் இளையவர்களையே முன்னுதாரணம் காட்டிப் பேசுகின்றார்களென்று. இதில் உண்மையில்லாமலும் இல்லை. இப்படியான சிந்தனைப்போக்கினால், சாதிக்க முனையும் எம்மிளைஞர்கள் பலரும் சந்திக்கும் சோதனைகளும், வேதனைகளும் நிறையவே. இவர்களுக்கும் அவைகளுண்டு....

" எனக்குத் தமிழ் நல்லாப் பேச வராது. ஆனாலும் நான் ஒரு தமிழன்தான். எம்மவர்களிடையே எனது "ரேப் " பாடல்களை பாடுவது, இலக்கியத்தரமற்றது எனும் நகைப்புப்குரியதாகிவிடும். அதனால்தான் பிறமொழிக்காறர்கள் மத்தியில் பாடுகின்றேன். " ரேப் " இசை வெறும் இசையல்ல. அது ஒருவாழ்வு. ரேப்பராக அனுபவித்து வாழாத ஒருவனால் சிறப்பான ரேப்பிசையைப் பிரசவிக்க முடியாது. என் உணர்வுகளை, அனுபவித்து இசையாகத் தருவதற்கு "ரேப்" இசைவாக இருக்கிறது. அதை நான் அனுபவித்து, சிறப்பாக இசைப்பதற்கு ஒரு ரேப்பராக வாழவிரும்புகின்றேன். இந்த விருப்பம் என் தோற்றத்தில் தரும் மாற்றங்கள், நம்மவர்கள் மத்தியில் என்னை பிழையாக அடையாளப்படுத்தலாம். அதனாலென்ன? நான் நானாகவாகவே இருக்கிறேன். ஒரு தமிழனால் ரேப்பிசையிலும் சிறந்திருக்க முடியும் என்பதை மாற்று இனங்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் எனும் வேட்கையோடே பாடுகின்றேன்..."

" சின்ன வயது முதலே நடனமும், காட்சிப்படுத்தலும், நானாகக் கற்றுக் கொண்டது. அந்நியச் சூழலில் நிறம், பொருளாதாரமுட்பட்ட பலவும் எம் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கின்றன. இவற்றோடு போட்டியிடுகின்ற எமக்குப் பெரியவர்களிடமிருந்து உதவிகள் வேண்டாம், உற்சாகமான சில வார்த்தைகள் வந்தாலே போதும். எங்களுக்குத் தெரியும், உயரங்களைத் தொடுவதற்கு வேண்டிய உழைப்பு என்னவென்று. எங்களுக்கான சுயகட்டுப்பாடுகளுடனேயே நாம் இருக்கிறோம்..."

" எல்லோரும் இசையை ரசிப்பதற்குத்தான் காதைப்பாவிப்பார்கள். ஆனால் எனது இசையைப் பிரசவிப்பது என்காதுகள்தான் என்பேன். எந்நேரமும் என்னைச் சுற்றிக் கேட்கும் சப்தங்களின் மீதான என் அவதானிப்பும், அது என்னுள் ஏற்படுத்தும் அனுபவமும், எந்தவொரு வாத்தியமும் இசைக்கத்தெரியாத என்னிடமிருந்தும் இசையைப்பிரசவிக்கிறது. இந்த அவதானிப்புக்கும், அனுபவத்திற்கும் நிறையத் தனிமை எனக்குத் தேவைப்படுகிறது. அது என்னைச் சுற்றிலுமுள்ளவர்களுக்கும் எனக்குமிடையில் ஒரு முரணைத் தோற்றுவிக்கிறதென்றும் சொல்லலாம். இவற்றையெல்லாம் மீறி, எனது ஆர்வம் என்னை வெளிப்படுத்தும்...."

ரேப்பிசை, நடனம் ஒளிப்பதிவு, இசையமைப்பு, எனும் துறைகளில், தங்கள் தடங்களை தமிழனாகவே பதிக்கும் இந்த இளம்கலைஞர்களின் எண்ணங்களுக்கும், ஆசைகளுக்கும் வானமே எல்லை. புலம்பெயர் சூழலின் நெருக்குதல்களோடு போட்டியிட்டு முன்னேறும் இவர்களும், இவர்களைப் போன்றவர்களும், எங்கள் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகள். அந்த நம்பிக்கைகளைச் செதுக்காவிடினும், சிதைக்காதிருப்போமா

No comments:

Post a Comment