Wednesday, May 15, 2013

நாகராஜ சோழன் MA, MLA


1994 இல் வெளிவந்து, இன்றளவும் அதன் அரசியல் நையாண்டிக்காக நினைவு கூரப்படும் படம் “அமைதிப்படை”. 19 வருடங்களுக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக நாகராஜசோழன் MA, MLA படத்தை எடுத்துள்ளார் இயக்குநர் மணிவண்ணன்.

ஒரு வருட அஞ்ஞாதவாசத்திற்குப் பிறகு, மீண்டும் தீவிர அரசியலுக்குள் வருகிறார் நாகராஜ சோழன். அவரின் வரவால் என்னென்ன அரசியல் மாற்றங்கள் நடக்கின்றன என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

நாகராஜ சோழனாக சத்யராஜ். முகத்திலொரு நக்கலான சிரிப்புடன் படம் முழுவதும் வருகிறார். தன் பாத்திரத்தை அனுபவித்து நடித்திருப்பார் போலும். எதிர்கட்சித் தலைவரைப் போல் நாக்கைத் துருத்திக் காண்பிப்பது என சில நொடிகள் எங்கேனும் படத்தில் சிரித்த முகமாக இல்லாமல் இருப்பாரேயன்றி, மற்றபடி கடைசிக் காட்சி வரை சிரித்தபடியே உள்ளார். ‘அமைதிப்படை’யில், அமாவாசை பாத்திரத்தில் ஒரு வில்லத்தனம் இருக்கும். ஆனால் இந்தப் படத்தின் நோக்கமே ஆளுங்கட்சி, எதிர்கட்சி, குடும்ப அரசியல் செய்யும் கட்சி என மூன்றினைக் கலாய்ப்பது மட்டுமே. ஆதலால் சத்யராஜின் சிரிப்பு விழலுக்கு இறைத்த நீராகப் போய்விட்டது. அதை விட கொடுமை, போலீஸ்காரராக வரும் சத்யராஜ் பாத்திரம், ‘ஐய்யோ அம்மா’ ரகமாக உள்ளது. 

லாரி ட்ரைவராக சீமான். பத்தோடு பதினொன்றாக அமைதிப்படையில் ஓர் ஓரமாய் தலையைக் காட்டியிருப்பார். ஆனால் நாகராஜ சோழனில் அவருக்கு பிரதான(!?) கதாபாத்திரம். ஊரிலுள்ள கிழவிகளின் உள்ளம் கவர் கள்வனாக இருப்பதால், அவர்களெல்லாம் தம் பேத்தியை இவருக்கு மணமுடித்துக் கொடுக்க ஆவலாய் இருப்பார்கள். மணிவண்ணன் சீமானை ஒரு தலைவர் 'ரேஞ்சு'க்கு தூக்கி வைத்துப் பேசுகிறார். வனத்தில் வசிக்கும் பூர்வக்குடிகளுக்கு.. மரங்களைக் காப்பாற்றிக் கொள்ள, உரிமைகளைக் காக்க, அடிமைத்தனத்தில் சிக்காமல் இருக்க, வன்முறையை சொல்லிக் கொடுக்கும் தோழராக அவதாரம் எடுப்பார் சீமான். ஆனால் அவரது அறிமுகக் காட்சியிலேயே, லாரியில் பெரிய பெரிய மரங்களை வெட்டி எடுத்துச் செல்பவராக வருவார். ஒருவேளை அவைகள்  காற்றில் தானாக விழுந்த மரங்களாக இருக்குமோ என்னவோ!! இரண்டாவது சத்யராஜிற்கே படத்தில் பெரிதாக வேடமில்லை எனும் பட்சத்தில் சீமான் மட்டுமென்ன விதிவிலக்கா?

“ஜனங்க உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க” – மணிமாறன்.
“நான் ஒன்னுமே பண்ணலையேடா!” – நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ.
“அதானுங்க. ஏதாச்சும் பண்ணா தான் ஓட்டுப் போடுவாங்க. நீங்க தான் ஒன்னுமே பண்றதில்லையே!!” 

இது 1994 இல்.

“ஜனங்க உங்களுக்கு ஓட்டுப் போட மாட்டாங்க.”
“நான் தான் நிறைய பண்ணியிருக்கேனே!!”
“ஆமாம் பண்ணீங்க. ஆனா எல்லாம் உங்க குடும்பத்துக்கு. எப்படி ஓட்டுப் பொடுவாங்க.”

இது இப்படத்தில். 

பதவியில் உள்ளவர்களிடம் ஒட்டிக் கொள்ளும் மணிமாறனாக மணிவண்ணன். இப்படத்தில், அவருக்கு நித்தம் பெண் கிறுக்கு தான். அதை பறைசாற்ற எவ்வளவு வசனங்கள் மற்றும் காட்சிகள் என்கிறீர்கள் படங்களில்? ‘கும்கி’ என ஒரு பருமனான பெண்ணை அறிமுகப்படுத்துவதில் இருந்து, ஒல்லியாக இருந்து அவள் எப்படிப் பருமனானாள் என  மணிவண்ணன் இழுத்துச் சொல்லும் காரணங்கள் வரை ஆபாச நெடி. போதாக்குறைக்கு, துப்புரவுத் தொழிலாளியாக வரும் கருப்புப் பெண்ணிடம், “உனைலாம் மேட்டுப்பாளையம் வரைக்கும் கூட கூட்டிட்டுப் போக முடியாது” என நொந்துக் கொள்வார். 

சில ரசிக்கும்படியான வசனங்கள் தவிர்த்து படம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அதற்குக் காரணம் அமைதிப்படையில் அரசியல் விமர்சிக்கப்பட்டிருக்கும். இப்படமோ கோர்வையற்று, காட்சிகள் சரி வர முடியும் முன்பே இருட்டாகி மறைகின்றன. துணை முதலமைச்சராக இருந்து முதலமைச்சரான பிறகும், மலையடிவாரமான ஓணான்பாளையத்திலியே தங்கியுள்ளார் நாகராஜ சோழன். மணிவண்ணனின் வயோதிகம்(!?) அல்லது ஒத்துழையாத உடல்நிலை, அப்பட்டமாய் அவரது உடல்மொழியிலும் முக பாவனைகளிலும் தெரிகிறது. படத்தில் ஒன்ற முடியாமல் போவதற்கு இதுவுமொரு காரணம். பாவம் நாகராஜ சோழன் தான் இவரையும் சேர்த்து சுமக்கிறார். மணிவண்ணன் தனது மகன் ரகு மணிவண்ணனையும் நடிக்க வைத்துள்ளார். வாரிசு அரசியலையும் கிண்டல் செய்யும் படமல்லவா? அதனால் தான் நாகராஜ சோழனின் மகன் கங்கை கொண்டனாக வருகிறார் ரகு.

சீமானுக்கு நிகரான பாத்திரத்தில் மூன்று பெண்கள் படத்தில் நடித்துள்ளனர். அமைச்சர் மகனாச்சே என்ற பரிதாபப்பட்டு(!?), அவருக்கு பக்கத்து வீட்டுக் கோழியைக் கொன்று சமைத்துப் போடும் செண்பகவள்ளியாக மிருதுளா முரளி நடித்துள்ளார். சூப்பர் மார்க்கெட் மற்றும் ஒரு பெரிய வீட்டை விட, பிலிப்பைன்சில் கரும்புத் தோட்டமும் மலேசியாவில் த்ரீ-ஸ்டார் ஹோட்டலும் விலை உயர்ந்தது என உணர்ந்து மணிமாறனை விட்டு நாகராஜ சோழனிடம் தாவுபவராக நடித்துள்ளார் வர்ஷா அஸ்வதி. நீர்ப்பறவையில் நந்திதா தாஸை விசாரிக்கும் காவல்துறை அதிகாரியாக வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. கொலையை நேரில் பார்த்ததும் சமுதாயப் பிரக்ஞை பெற்று விடுபவராக கோமல் ஷர்மா நடித்துள்ளார். இவர் சீமானின் அக்கா மகளாகவும், ஆசிரியையாகவும் படத்தில் வருவார். இம்மூன்று பெண்களும் நாகராஜ சோழனுக்கு எதிராக இணைவார்கள்.

அமைதிப்படை போலவே இப்படத்திலும் வரிசையாக வாகனங்கள் நிற்கின்ற காட்சியின் பொழுது குண்டு வெடிக்கும். அதுவும் மக்கள் போராட்டம் என தொலைகாட்சியில் ஒரு பேரணியைக் காட்டுவார்கள். அதை தொடர்ந்து குண்டு வெடிக்கும். எது எப்படியோ சத்யராஜின் சிரித்த முகத்துடன் படம் வெகு நிறைவாய் முடிகிறது.

No comments:

Post a Comment