Wednesday, May 15, 2013

எதிர்நீச்சல்


உங்க பெயர் குஞ்சிதபாதம் என்றிருந்திருந்தால்.. உங்க நிலைமையைக் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் படத்தின் நாயகனுக்கு அது தான் பிரச்சனை. அவனது பெயருடன் எதிர்நீச்சல் போட்ட வண்ணம் உள்ளான்.

நாயகன் ஹரீஷாக சிவகார்த்திகேயன். இவரது பூர்வாசிரம பெயர் தான் குஞ்சிதபாதம். அசட்டுத்தனமாய் சிரித்தபடி முகத்தை வைத்திருப்பதில் இருந்து அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார். விஜய் டி.வி.யில் பெற்ற அடையாளங்களை, 3 படத்திற்குப் பிறகு முடிந்த மட்டும் உதறியுள்ளார். நாயகி கீதா மிஸ்ஸாக ப்ரியா ஆனந்த். வாமனன், புகைப்படம், 180 என தமிழில் முன்பே நடித்துள்ளார். ஸ்ரீதேவியின் கம்-பேக்கான இங்கிலீஷ் விங்கிலீஷிலும் நடித்திருப்பார். ஆனால் இப்படம் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்கும். இப்படத்தில் குழந்தைகளுடன் சிரித்து சிரித்துப் பேசிப் பழகும் ஆங்கில ஆசிரியையாகவும், ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பணம் 'கலெக்ட்' செய்கிறவராகவும் நடைத்துள்ளார். இப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்ட நாயகி, தாயை இழந்த நாயகன் கண்ணில் பட்டால் என்னாகும்? அதே தான். காதல்ல்ல்ல். காதலை நாயகி அங்கீகரிக்கும் இடம் ரசிக்க வைக்கிறது.

அனிருத் இசையில் பாடல்கள் முன்னரே 'ஹிட்'டாகியிருந்தன. முதல் பாதியில் பாடல்கள் சிறிய இடைவெளியில் வந்தபடியே இருந்தாலும்,  படத்தில் பாடல்களைப் பொருத்தியிருந்த இடம் உறுத்தாமல் இதமாக உள்ளது. கட்டாய குத்துப்பாடல் மறைந்து அது டாஸ்மாக் பாடலாகப் பரிணாமம் பெற்றுள்ளது தமிழ்த்திரைப்படங்களில். தயாரிப்பாளரான 'போயட்டு' தனுஷே காதல் தோல்வியால் குடிக்க வந்தவர்களை மகிழ்விக்க ஆட்டம் போடுகிறார். நயன்தாராவும் நட்பிற்கு மதிப்பளித்து உடன் ஆடியுள்ளார். இரண்டாம் பாதியில் படம் 'சீரியஸ்' கலரைப் பெறுகிறது. கிரிக்கெட்டைக் கொண்டாடும் நாட்டில், மற்ற விளையாட்டுகள் லைம்-லைட்டிற்கு வருவதில்லை. அதையும் மீறி நம்பிக்கையின் கீற்றாக சிலர் பிரகாசிக்கத் தொடங்கும் பொழுது, பணம் பெரும்பங்கு வசித்து அக்கீற்றை இல்லாமல் செய்து விடுகிறது. அந்த ஃப்ளாஷ்-பேக் காட்சிகள் கொஞ்சம் இழுவையாக நீள்கிறது.

கோச் வள்ளியாக அட்டகத்தி நந்திதா நடித்துள்ளார். அவரின் கோச்சாக ஜெயபிரகாஷ். மனிதர் எந்தப் பாத்திரத்தில் வந்தாலும் அந்தப் பாத்திரமாகவே மாறி விடுவார் போல. தில்லுமுல்லு கோச்சாக ரவி பிரகாஷ். நீ தானே என்  பொன்வசந்தம் படத்தில் ஜீவாவின் அண்ணனாக நடித்திருப்பார் ரவி பிரகாஷ். படத்தின் நகைச்சுவைக்கு உதவுவது குஞ்சிதபாதத்தின் நண்பன் பீட்டராக நடித்திருக்கும் சதீஷ். "நீ மராத்தானில் ஓடுவியான்னு வள்ளிக்கு சந்தேகம்; நீ வள்ளி கூட ஓடிடுவியோன்னு கீதாக்கு சந்தேகம்" என டைம்மிங்கில் அசத்துகிறார் சதீஷ். "தானா வர தமன்னாவ தலையில் தட்டி வேணாம்னு சொல்வியா?" என படத்தில் ஏடாகூட வசனங்களுக்கும் பஞ்சமில்லை. மனோபாலா, லொள்ளு சபா சுவாமிநாதன், மதன்பாப் ஆகியோர் இல்லாமலே கூட படம் நகைச்சுவையாக தான் இருந்திருக்கும். எழுத்தும் ஆக்கமும்  R.S.துரை செந்தில்குமார். இவர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிப் புரிந்தவர். சண்டை, வன்முறை, வில்லன், அரிவாள், இரத்தம், கூச்சல், நகைச்சுவை என்ற பெயரில் அநியாய மொக்கை இல்லாத படைப்பாக முதல் படத்திலேயே பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 

No comments:

Post a Comment