Wednesday, May 15, 2013

9 மாநகராட்சிகளிலும் ‘அம்மா உணவகம்’! சென்னை மெனுவில் பொங்கல், சப்பாத்தி சேர்ப்பு- ஜெ.அறிவிப்பு!


சென்னையைப் போல் 9 மாநகராட்சிகளிலும் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து பேசியதாவது:
வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் என்ற பாரதியின் வரிகளுக்கேற்ப, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மலிவு விலையில் வயிறார உணவு உண்ணும் வகையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் மலிவு விலை உணவகங்களை நான் திறந்து வைத்துள்ளேன் என்பதை மாமன்ற உறுப்பினர்கள் நன்கு அறிவார்கள். இந்தத் திட்டத்தின்படி, காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உணவாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

9 மாநகராட்சிகளிலும்…
இந்தத் திட்டம் தமிழகத்தின் இதர பகுதிகளுக்கும் விரிவு படுத்தப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம் புத்தூர், திருநெல்வேலி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, வேலூர், மற்றும் ஈரோடு ஆகிய ஒன்பது மாநகராட்சிகளில் முதற்கட்டமாக ஒவ்வொரு மாநகராட்சியிலும் 10 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் இந்த மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உணவகங்களிலும் காலை 7 மணி முதல் 10 மணி வரை இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கும், மதிய உண வாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படும்.
சென்னை மெனுவில் மாற்றம்
சென்னை மாநகராட்சியில் தற்போது செயல்பட்டு வரும் உணவகங்களுக்கு வரும் பொதுமக்கள் காலை சிற்றுண்டியில் கூடுதலாக பொங்கல் சேர்க்க வேண்டும் என்றும், மதிய உணவின் போது, கூடுதலாக சாதவகைகளை சேர்க்க வேண்டும் என்றும், மாலை நேரங்களில் சப்பாத்தி விநியோகிக்க வேண்டும் என்றும், கோரிக்கைகள் விடுத்துள்ளனர். பொது மக்களின் கோரிக்கையினை ஏற்று,
ரூ5க்கு பொங்கல்.. ரூ3க்கு சப்பாத்தி
சென்னை மாநகரத்தில் செயல்படும் அனைத்து மலிவு விலை உணவகங்களிலும், காலை சிற்றுண்டியின் போது இட்லி தவிர, பொங்கல் சாம்பார் 5 ரூபாய்க்கும், மதிய உணவின் போது எலுமிச்சை சாதம் அல்லது கருவேப்பிலை சாதம் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மாலை நேரங்களில் சப்பாத்தி விற்பனை செய்வதைப் பொறுத்த வரையில், சப்பாத்தி தயாரிப்பதற்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் பாத்திரங்களை ஒப்பந்தப் புள்ளி மூலம் கொள்முதல் செய்வதற்கு தேவைப்படும் கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சென்னை மாநகராட்சி நடத்தி வரும் 200 மலிவு விலை உணவகங்களிலும் மாலை வேளைகளில் இரண்டு சப்பாத்தி மற்றும் பருப்பு கடைசல் அல்லது குருமா 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். இதன் மூலம், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் விலைவாசி உயர்விலிருந்து ஓரளவு பாதுகாக்கப்படுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

No comments:

Post a Comment