Wednesday, May 15, 2013

சேட்டை


அமீர்கான் தயாரிப்பில் வெளிவந்த 'டெல்லி-பெல்லி' ஹிந்திப் படத்தின் தமிழ் ரீ-மேக். 

கடத்தல் கும்பலிடம் சிக்கிக் கொள்ளும் மூன்று பத்திரிகையாளர்கள் எப்படித் தப்பிக்கிறார்கள் என்பது தான் கதை.

காமெடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்துள்ளார் சந்தானம். மேலும் படத்தின் நகைச்சுவைப் பகுதிக்கும் (ஸ்க்ரிப்ட்) பொறுப்பேற்கிறார் சந்தானம். பாட்ஷா ரஜினி போல் டையமன்ட்டை ஒப்படைத்து விடாலும் என்ற பிரேம்ஜியின் யோசனைக்கு,  'ரஜினி நக்மாவை உஷார் பண்றதுக்காக டையமன்ட்டைக் கொடுத்தார்' என சிந்தாமல் சிதறாமல் கவுன்ட்டர் வசனம் பேசி.. எப்பொழுதும் போல் படத்தின் கலகலப்பிற்கு காரணமாகிறார். யாரோ வீட்டிற்குள் புகுந்து விட்டார்கள் என அடிக்க வரும் வீட்டினர்.. ஃபர்தா அணிந்திருந்தவரைப் பார்த்ததும் அடிக்காமல் தயங்கி நிற்பார்கள் டெல்லி-பெல்லி படத்தில். ஆனால் ஃபர்தாவால் முகத்தை மூடாத சந்தானம், "முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி;  கேட்காம உங்க வீட்டுல கக்கூஸ் போனதற்கு சாரி" என அங்கேயும் பேசுகிறார். சந்தானமும் அஞ்சலியும் மாறி மாறி தமிழ், ஆங்கிலத் தாள்களின் தரத்தை விமர்சித்துக் கொள்வது 'நச்'சென உள்ளது.

வித்தியாசமான வேடத்தில் கலக்கியுள்ளார் நாசர். "என் பையன்கிட்ட சொன்னேன். உனக்கு ரொம்ப பிடிச்ச படமான 'டெல்லி- பெல்லி' தமிழ் வெர்ஷனில் நான் நடிக்கிறேன் என. என்ன கேரக்டரில் என கேட்டேன். வில்லனாக தான் என்றேன். 'எப்படி பப்பா உங்களால நடிக்க முடியும்?' என ஆச்சரியமாக கேட்டான். ஏன்டா நான் 150 படத்துக்கு மேல நடிச்சிருக்கேன். இதுல ஏன் நடிக்க முடியாதுன்னு கேட்டேன்.டெல்லி பெல்லி-ல வில்லனா நடிச்ச ராஜ்க்கு ஆத்லெட் பாடி. அவர் சும்மா நடந்தாலே பல விஷயம் கன்வே ஆகும். உங்களுக்கு தொப்பை விழுந்துடிச்சு. உங்களால எப்படி நடிக்க முடியும் என கேட்டான். அதனால நான் இந்தப் பாத்திரத்தை சேலஞ்சா எடுத்துப் பண்றேன். இதுவரை எந்தப் படத்திற்கும் போடாத எஃபோர்ட்டை இந்தப் படத்திற்கு போட்டுள்ளேன்" என படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சொன்னார் நாசர். 

நாட்டையே உலுக்கும் செய்திகளைக் கொணர்ந்து நாட்டிற்கு ஏதாச்சும் நல்லது செய்ய நினைக்கும் நிருபர் ஜே.கே.வாக ஆர்யா. மூன்று பாடல்களில் தோன்றுவதால் படத்தின் நாயகன் என கொள்ளலாம். எனினும் படம் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதையைக் கொண்டது. "எத தான் நீ கண்டுட்ட புதுசா?" என கானா பாலாவின் பாடல் வரிகளுக்கு நடனமாடும் பிரேம்ஜி அமரன் அசத்துகிறார். நாயகர்கள் தங்கியிருக்கும் வீட்டின் உரிமையாளராக வரும் ஆலியும், நடனம் சொல்லித் தரும் மனோபாலாவும் சில காட்சிகளாலேயே வந்தாலும் திகட்டாமல் கதையின் போக்கிற்கு உதவுகின்றனர்.

ஏர்-ஹோஸ்டஸ் மதுவாக ஹன்சிகா மோத்வானி. முந்தைய படமான ஓகே.ஓகேவில் ஏர்ஹோஸ்டஸ் ட்ரெயினிங்கில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வேலை பளுவினால் இளைத்தும் போயுள்ளார். ஆர்யாவுடன் இரண்டு பாட்டுக்கு ஆடுகிறார் என்பதால் நாயகியாக கொள்ளலாம். 'கண்ணா.. லட்டு திண்ண ஆசையா?' என ஆர்யாவைப் பார்த்து கேட்டவண்ணம் உள்ளார். ஆங்கில செய்தித்தாள் நிருபர் சக்தியாக வரும் அஞ்சலிக்கு ஆர்யாவுடன் ஒரு பாடல் தான். 

தமனின் ஒலிப்பதிவும், முத்தையாவின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் படத்திற்கு பலம் சேர்க்கின்றன. 'டெல்லி-பெல்லி' படம் தந்த தாக்கத்திற்கு முக்கியமான காரணம் அப்படத்தின் கன்னாபின்னா வசனங்கள் தான். இப்படம் 'யூ' செர்ட்டிஃபிகேட் பெறுமளவிற்கு வடிகட்டின வசனங்களையே கொண்டுள்ளதால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அக்ஷத் வெர்மாவின் மூல திரைக்கதையினின்று சிற்சில மாறுதல்களை இயக்குநர் கண்ணனும், யூ டி.வி. தனஞ்செயனும், ஜான் மகேந்திரனும் இணைந்து செய்துள்ளனர்.  முடிந்தவரை லாஜிக்கில் ஓட்டை விழுந்து விடக்கூடாதென மெனக்கெட்டுள்ளது தெரிகிறது. காமெடி சூப்பர் ஸ்டாராக அவதாரம் எடுத்திருக்கும் சந்தானத்தால் படம் ஜாலியாக தொடங்கி அப்படியே முடிகிறது. 

No comments:

Post a Comment