சினிமா நடிகராகும் ஆசையில் சென்னை வரும் ஜெய் கொலைப்பழியில் சிக்குகிறார். அதிலிருந்து மீள்வதுதான் கதை. நடுவே காதல், லந்து எல்லாம் உண்டு.
ரவுடிகள் தாக்குதலில் காயம் அடையும் லட்சுமிராயை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றுகிறார். இருவரும் சினேகம் ஆகிறார்கள். மறுநாள் லட்சுமிராய் வீட்டுக்கு செல்லும் ஜெய் அங்கு அவர் கொலையாகி கிடப்பதை பார்த்து அதிர்கிறார்.
ஜெய் கொலையாளி என போலீஸ் துரத்துகிறது. அரசியல்வாதிகளின் பதவிச் சண்டையில் டெல்லிகணேஷ் கொல்லப்பட அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாக கருதி வில்லன் கூட்டமும் போலீசும் பிடிக்க அலைவதை உணர்கிறார் ஜெய். லட்சுமிராயை கொன்றவனையும் கண்டுபிடிக்கிறார்.
ஆதாரத்தை தேடி பிடித்து கொலைப்பழியில் இருந்து எப்படி மீள்கிறார் என்பது கதையின் முடிவு.
கதாநாயகனுக்குரிய எவ்வித சாகசமும் செய்யாமல் பளிச்சிடுகிறார் ஜெய். நண்பன் காசில் டிரெஸ், செல்போன் என ஜாலி ரவுண்ட் கட்டுவதும் சினிமா கம்பெனிகளில் நடித்து காட்டி திட்டு வாங்கி விரட்டியடிக்கப்படுவதும் ரகளை.
பூட்டிய வீடுகளுக்குள் ரகுமானுடன் நுழைந்து பதறுவதிலும் ப்ரியா மேல் காதல் வலை வீசுவதிலும் அழுத்தம் பதிக்கிறார்.
லட்சுமிராய் கொலையாகி ஜெய்யை போலீஸ் விரட்ட துவங்கியதும் கதை வேகம் பிடிக்கிறது. அடுக்குமாடி விளிம்பில் ஜெய், ரகுமான் மோதும் சண்டை காட்சி பதற வைக்கிறது.
டேப் ஆதாரம் தேடும் ரவுடிகளையும் போதை மருந்து கடத்தல் கூட்டத்தையும் நேருக்கு நேர் மோத விட்டு வீழ்த்தும் தந்திரம் சூப்பருங்க.
புதுமுகம் ப்ரியா கவர்கிறார். லட்சுமிராய் கவர்ச்சியாக சாகிறார். சந்தானம் காமெடி பெரிய பலம்.
காதல், சஸ்பென்ஸ், ஆக்ஷன் என கதையை விறுவிறுப்பாக நகர்த்துகிறார் இயக்குனர் அஹமத். யுவன் சங்கர்ராஜா இசையும், அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
No comments:
Post a Comment